அறிஞர்களின் கடமை பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்!

மனித வாழ்வில் வளமும் அமைதியும் சிறக்க வேண்டுமானால் சமுதாயத்தில் நான்கு துறைகளில் விளக்கமும், அவற்றைச் சார்ந்த வாழ்க்கை முறையும் அமைய வேண்டும். கல்வி, அரசியல், பொருளாதாரம், சுகாதாரம் ஆகிய நான்கு முக்கிய துறைகளே அவைகளாகும்.

கல்வி:

வாழ்வின் வளம் பெருக்க உதவும் கல்வியில் இன்பத்தையும் அமைதியையும் வளர்க்கக்கூடிய பண்பாட்டு அறிவு தற்காலத்தில் இடம் பெறவில்லை. பண்பாட்டு அறிவு என்பது இயற்கையை அதன் செயலொழுங்கை உணர்ந்து அதற்கு இசைவாக வாழும் அறிவாகும். பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்திற்கும் காரணப்பொருளாக உள்ள இறைநிலையே பிரபஞ்ச தோற்றங்களாகவும், உயிரினங்களாகவும் மலர்ந்து முறையாகச் செயல்படும் உண்மையை உணரும்போது உள்ளம் விரிவடைகிறது. உண்மை உணர்வின் தெளிவில் இயற்கையை மதித்து வாழும் அறிவு இறைவழிபாடு எனப்படும். ஒழுக்கம், கடமை, ஈகை சார்ந்த அறநெறி வாழ்வே உயிர் வழிபாடு என்று போற்றப்படுகிறது. இறைவழிபாட்டால் உள்ளம் பண்படுகிறது. பண்பட்ட உள்ளமே அன்பும் கருணையும் இணைந்த உயிர் வழிபாடாக மலர்கிறது. எழுத்தறிவு, தொழிலறிவு, இயற்கைத் தத்துவ அறிவு, பண்பாட்டு அறிவு ஆகியவை இணைந்த அறிவே சரியான கல்வி அறிவாகும்.

அரசியல்:

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனது அடிப்படை தேவைகளை அடைந்து இன்பமாக வாழ உரிமை உண்டு. தனிமனித வாழ்வுரிமை என்பது சமுதாயத்திற்கு துன்பம் அளிக்காமலும் சமுதாய வளத்தையும் அமைதியையும் குலைக்காமலும் அமைய வேண்டும். இத்தகைய வாழ்வின் சுதந்திரத்தை அமைத்து, காத்து, நடத்தி வரும் அமைப்பே அரசியல் ஆகும்.

பொருளாதாரம்:

இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக மாற்றி அமைக்கும் பொறுப்பில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. இன்றைய உலகில் பலர் கடுமையாக உழைக்க, சிலர் அவ்வுழைப்பின் பலனைச் சூழ்ச்சியினால் திரட்டி அனுபவிக்கும் நிலையே உள்ளது. பெரும்பாலோர் வாழ்வில் வறுமை ஓங்கி நின்றால், மக்களிடையே அமைதியின்மையே உருவாகும். எல்லோரும் தம் கடமையை உணர்ந்து, “எனது உழைப்பின் மூலமாகவே உயிர் வாழ்வேன்” என்ற அருள்தந்தையின் கருத்துத் தெளிவில் வாழ்ந்தால் வறுமை நீங்கிய வாழ்வு மலரும்.

சுகாதாரம்:

நோய் நொடியின்றி வாழ அறிவை ஏற்ற வகையில் வளர்த்துச் செயல்படுத்தும் முறையே சுகாதாரம் ஆகும். உடல்நலம் மனவளத்தைச் சார்ந்தே அமைந்துள்ளது. தனி ஒருவருக்கு ஏற்படும் உடல் நல மனவளக்குறைவு குடும்ப நிலையிலும் சமுதாயத்திலும் உரிய தாக்கத்தை உருவாக்கி விடுகிறது. வாழ்வில் இனிமையும் அமைதியும் கெடுகிறது. மக்களிடையே மனவளமம் உடல்நலமும் ஓங்கி நிற்க இயற்கைத் தத்துவ அறிவும் அதனை மதித்து வாழும் முறையான பயிற்சியும் அவசியமாகும். இதை உணர்ந்து நல்வாழ்வை நோக்கிய வாழ்க்கை நெறியே சுகாதாரம்.

ஆக கல்வி, அரசியல், பொருளாதாரம், சுகாதாரம் போன்ற சிறப்பான துறைகளில் இருக்கும் அறிஞர்கள் அனைவரும் உயிருணர்வுக் கல்வி பற்றியும் அதன் மேன்மை, சிறப்பு, பயன்கள் போன்றவற்றையும் அறிந்து அதன்படி வாழ்க்கைத் தரத்தை மிகச்சிறப்பாக மாற்றி அமைக்கலாம். அது மட்டுமல்லாமல் மனவளக்கலை பயின்று தாங்கள் அர்ப்பணித்துள்ள துறையில் மென்மேலும் உயரலாம். அவரவர் தத்தம் துறைகளில் சாதனை புரிந்து அதேசமயம் முடிந்தவரை மக்களுக்கு உதவிபுரிந்து ஆன்மீகத் தொண்டாற்றுவோம். வாழ்க வளமுடன்!

                       வாழ்க வையகம்!                            வாழ்க வளமுடன்!

Join SKY Family to experience Health, Happiness & Harmony

The World Community Service Centre

Temple of Consciousness, Aliyar
Mobile Number: +91 79044 02887
Email: connect@vethathiri.ac.in