There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
நமது குண்டலினி யோகத்தின் சிறப்பும், பயனும் ஆன்மீக நாட்டமுடைய அன்பர்களால் நன்கு உணரப்பெற்று வருகிறது. பயிற்சியில் தேறியவர்கள் தொண்டு இனி உலகுக்கு அதிகமாகத் தேவைப்படும். குடும்ப கடமைகள் கெடாத முறையில் ஓய்வு நேரங்களை ஒதுக்கி அருட்தொண்டு புரிய தயாராக இருக்க வேண்டும்.
அன்பர்களே! நமது குண்டலினி யோகம் மெய்விளக்க வாழ்க்கை வழியாகும். பக்திவழி, ஞானவழி என்னும் இருவழிகளில் குண்டலினி யோகமானது ஞானவாழ்வை விளக்கி வழி நடத்துவதாகும். இதனால் இது பக்தி வழியைப் புறக்கணிக்கின்றதாகாது. சில அன்பர்கள் பக்தி வழி, ஞான வழி இரண்டையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக எண்ணுகிறார்கள். அது தவறு. தனிமனிதன், சமுதாயம், இயற்கை மூன்றையும் நன்குணர்ந்து வாழ்வை வெற்றியாகவும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நடத்த ஏற்ற அறிவின் விளக்கமே ஞானமாகும். அறிவில் முழுமை பெற்ற அத்தகைய ஞானிகள் வாழும் வாழ்க்கை வழியே ஞானவழியாகும்.
மெய்ப்பொருள் உணர்ந்த அறிவின் முழுமை, ஒழுக்கம், கடமை, ஈகை என்ற முச்சிறப்பும் கொண்ட அறநெறியை பின்பற்றி வாழும் உயர் பண்பு இவையே ஞான வழியின் சிறப்பாகும். இச்சிறப்பான வாழ்க்கை நெறியே மனித குலம் முழுமைக்கும் நலம் தரும். அதனால் எல்லா மக்களும் ஞானவழியே பின்பற்றி வாழ வேண்டும் என அறிவறிந்த ஞானிகள் எண்ணினார்கள். அறிவிலே முழுமை பெறும் தகுதிபெற்றாலன்றி ஞானவாழ்வை உணர்ந்து பின்பற்ற முடியாது. ஆகவே இறைநிலை நாட்டத்தில் பழக்கம் ஏற்பட ஆலய வழிபாடும், அறநெறி பழக்கத்தில் நிலைபெற சடங்குமுறைகளும் வகுக்கப் பெற்றன.
இயற்கையின் இயல்பூக்கச் சிறப்பு, பொருட்களின் தன்மை, வினையின் விளைவு இவற்றை அறியாதவர்களும், ஞானவழி வாழ்வைப் பின்பற்றி வாழ வகுத்துக் கொடுத்த வாழ்க்கை முறையே பக்திவழியாகும். தனக்குத் தெரிந்ததும், தன்பழக்கத்திலுள்ளதும் இவையே உயர்ந்த நெறி என்று எண்ணும் பிடிவாதக்காரர்கள் ஞானம் வேறு, பக்தி வேறு என்று பிரித்து வேறுபடுத்திக் கூறுகிறார்கள். கருத்துப் பிணக்குகளும் உண்டாகின்றன.
முட்டையிலிருந்து குஞ்சு உருவாகி வெளிவருகிறது. அதுவரையில் அடைகாப்பதும், ஓடு உடையாமல் காப்பதும் அவசியம். ஓட்டைப் போன்றது மதம். அடைகாப்பது போன்றது பெரியோர்கள் பாதுகாப்பும், போதனைகளும், சடங்குமுறைகளும், குஞ்சு உருவாகிய பின் ஓடு வேண்டியதில்லை. அடைகாப்பதும் தேவையில்லை. இது போன்றே அறிவின் முழுமை பெற்ற பின் மதமோ, சடங்குகளோ தேவையில்லை. ஓடும், அடைகாப்பதும் ஒக்கும் பக்தி. உருவாகி வெளிப்பட்ட குஞ்சு போன்றதே ஞானம். பக்தி பக்குவப்படுத்தும் வழி. ஞானம் முழுமை பெற்ற நிலை. காயைப் போன்றது பக்தி, பழம் போன்றது ஞானம். காய் இன்றி பழம் இல்லை. பக்தியின்றி ஞானம் இல்லை. எனவே வாழ்வின் சிறப்பறிந்து இரண்டு நிலைகளையும் போற்றி நமது கடமையாற்றி வாழ்வோம்.
PHONE: 7904402887 / 04253-292746