குருவின் மேன்மை பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்!


மானிடர் அனைவரும் அறிவைப் பெற்றிருந்தாலும் சிலரே அதனை முழுமையாகப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்கள். அந்த ஆற்றலால் அறிவை முழுமையாக அறிந்து, பின் அறிவின் மூலமாகிய தெய்வநிலையை உணர்ந்து கொள்கிறார்கள். அப்படி உணர்ந்த சிலர் அந்நிலையிலேயே அமிழ்ந்து விடுகிறார்கள். மற்றும் சிலர் தாம் பெற்ற அனுபவத்தை மற்றவர்களும் பெற வேண்டும் என்ற பெரு நோக்கால் அறிவு செம்மைப்படாதவர்களையும் கூட செம்மைப்படுத்தி அந்த உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்கிறார்கள். 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தெளிவாக விளக்குகிறார் ஓரிடத்தில் ஆள் எட்டிப் பார்க்க முடியாத உயரமான அகண்ட பாத்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்மேல் ஏணி ஒன்று சாய்த்து வைக்கப்பட்டிருக்கிறது. ஏறத் தெரிந்து கொண்ட சிலர் அதன் மேல் ஏறிப் பாத்திரத்தில் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்க்கிறார்கள். அது நிறை பொங்கித் ததும்பும், இனிய சுவையான ஆனந்தமான பாயாசம். சிலர் அதில் எட்டிக் குதித்து அமிழ்ந்து விடுகிறார்கள், அதைச் சுவைத்த சிலர் தான் அனுபவித்ததை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற பெருநோக்கில் கீழே இறங்கி வந்து, மற்றவர்களிடமும் சொல்லி, முடியாதவர்களுக்கு வலிவு கொடுத்து ஏறச்செய்து பாத்திரத்திலுள்ள இன்சுவையான பாயாசத்தை அனுபவிக்கச் செய்கிறார்கள்.

 அவர்கள்தான் போற்றுதற்குரிய “குருமார்கள்”. வாழையடி வாழையாக வந்த அந்தத் தியாக பரம்பரையில் இன்றும் பயன் கொடுத்துக் கொண்டிருக்கும் பல குருமார்கள் இருக்கிறார்கள். அவர்களுள் இந்த நூற்றாண்டு தந்த மகான் வேதாத்திரி மகரிஷி.