There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
வானில் மேகமாக இருப்பது தூய்மையான நீர்தான். ஓரளவு வெப்பம் அமைந்து காற்றில் மிதக்கும் எடையோடு சின்னம் சிறு துளிகளாக இருக்குமட்டும் அது வானில் மிதந்து கொண்டு மேகமாகக் காட்சியளிக்கிறது. நிலத்தின் குளிர்ச்சி மேகத்தை தாக்கும் போது சிறுதுளிகள் இணைந்து காற்றை விட பளுமிகும்போது கோர்வை பெற்று நீராகி நிலத்தில் விழுகிறது. இது மழை. இந்த நீர், நிலத்தில் எந்த இடத்திலும் நிலைக்க முடியவில்லை. வெப்பநிலை ஏற்றத் தாழ்வுக்கேற்ப கீழ்நோக்கியும் மேல் நோக்கியும் ஓடுவதிலேயே இயல்புடைய வேகம் உடையதாக இருக்கிறது.
ஏரி, குளம், குட்டை, கிணறு, ஓடை, ஆறு என்ற பெயர்களோடு நிலத்தில் உலவிக் கொண்டிருக்கிறது. எனினும் போதிய அளவு வெப்பம் கிடைத்துவிட்டால், ஆவியாகி, நில ஈர்ப்புச் சக்தியை எதிர்த்து மேலே ஏறி வானில் மேகமாக தூய நீராக நிலவுகிறது. இதுபோன்று தான் மனித மனமும் தூய்மையான இறைநிலையாக ஒரு புறமும், உயிர் என்னும் நுண் ஆற்றலூடே இயங்கும்போது எல்லா இயக்கப் பதிவுகளையும் அடக்கமாகக் கொண்ட அறிவாகவும், புலன்கள் மூலம் படர்க்கை எய்தும் போது உணர்ச்சிகளின் ஏற்றத் தாழ்வோடு கூடிய மனமாகவும் இயங்குகிறது.
மனத்தின் நடுப்பகுதியான உயிர் என்னும் நிலை பரிணாமத் தொடராக வந்த எல்லா இயக்கங்களையும் பதிவு கொண்டு சேமித்து வைத்திருக்கும் இயற்கையின் இரகசிய நிதியாக இருப்பதையும், அதற்கு ஆதியான தூய நிலையில் சுத்த வெளியாகவும் இம்மூன்று நிலைகளைப் பிரிக்க முடியாத தொகுப்பாக மனித மனம் அமைந்துள்ள உண்மை, தனது நிலையே என்பதை புலனுணர்விலேயே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மனித மனம், உணர்ந்து கொள்ளும் போது உணர்ந்தபின் அதற்கொப்ப உடலை இயக்கி வாழ்வை நடத்தும் போதும், தன்னிலை விளக்கமும் இறையுணர்வின் முழுமையான இறையறிவும் ஏற்படுகிறது. மேகம் நீராகி நீர் மீண்டும் மேகமாகும் வரையில் எத்தனை விதமான திருவிளையாடல்கள் நடைபெறுகின்றன?
இதுபோன்றே உலகம் என்ற அரங்கில் உணர்ச்சியற்ற, உணர்ச்சியுடைய எல்லாப் பொருள்களும் அமைந்து அது அதுவாகி நடந்து கொள்ளும் திருவிளையாடல்தான் என்ன? “இயற்கை என்ற போராட்டக்காரனுக்கு எல்லா உயிர்களும் ஆட்டக்காய்கள்” என்பது போல அனைத்துயிர்களும் ஆட்டப்படுகின்றன. அவ்வப்போது மேடை அமைத்து பிரபஞ்ச இயக்கம் எனும் அவனுடைய கதைத் தொடரில் ஒரு கட்டத்தை உணர்த்தி ஆட வைக்கிறான். அடுத்து நாம் நடிக்க வேண்டிய நாடகம் என்ன என்பதை பிரபஞ்ச நாடக கர்த்தா நமக்கு தெரிவிக்கவே இல்லை. கதையும், மேடையும், பாத்திரமும், உரிமையாளன் ஒழுங்கமைத்த திட்டமே. நமது வாழ்க்கை எனும் தொடரிலே நடந்து வரும் திருவிளையாடல்களை எண்ணி, எண்ணி வியந்து கொள்ளப் பழகுங்கள்.
திருவிளையாடல்களின் அற்புதத்தையும், மனித மனம் முன்கூட்டி அறிந்து கொள்ள முடியாமல் பல நிகழ்ச்சிகளை அவை நடக்கும் வரையில் ரகசியமாக இயற்கை என்ற நிதிப்பெட்டியில் அடங்கியிருக்கும் பெருமையையும் யாரால் அறிந்து கொள்ள இயலும்? வியப்புதான் மேலிடுகிறது. இறையருளின் பெருமையை நினைக்க நினைக்க, அறிய அறிய அந்த அளவிலே மனித மனத்தின் தன்முனைப்பு குறைந்து வருகின்றது. ஒவ்வொரு மனிதனிடமும் வைப்புநிதியாக அமைந்திருக்கும் பேரருளின் பெருநிதியை மறைத்துக் கொண்டிப்பருப்பதும் ஒரு விதத்தில் தன்முனைப்பே ஆகும்.
மனத்தை உயிர் மேல் வைத்துப் பழகும் தியானமோ, அசைவற்று நினைவற்றிருக்கும் சாதனையோ, பல கோணங்களில் செய்யும் உடற்பயிற்சியோ, தற்சோதனையோ மாத்திரம் தவமல்ல. மனிதப் பிறவியின் பெருநோக்கமும், மதிப்பும் உணர்ந்து அறிவின் நிலையறிந்து, பேரறிவின் நிலையெய்தி, புலன்களை ஒழுங்குபடுத்தி, ஒழுக்கம், கடமை, ஈகையெனும் அறநெறிகளை தனதியல்பாகக் கொண்டு அயரா விழிப்போடு தானும் வாழ்ந்து, பிறரையும் இனிதாக வாழ வைக்கும் உயர்வாழ்வே தவம் ஆகும். இத்தகைய பண்பாட்டுக்குத் தன்னை தகுதியாக்கிக் கொள்ளும் பயிற்சி முறைகளே குண்டலினி யோகம், தற்சோதனை, உடற்பயிற்சி, வேதாந்த விளக்கங்கள், போதனைகள் இவையுமாகும். இவையெல்லாம் இயற்கையெனும் இறைநிலையை அடைய வழிகாட்டியாக அமைகிறது.
PHONE: +91 7904402887 / 04253-292746