There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
உங்கள் குடும்பத்தில் அமைதி இருக்கிறதா – பிணக்கிருக்கிறதா? என ஆராயுங்கள். எல்லோர் வாழ்க்கையிலும் பிணக்குத்தான் மலிந்திருக்கின்றது. பிணக்கானது சிலர் வாழ்க்கையில் சிறியதாயிருக்கலாம். வேறு பலர் வாழ்க்கையில் பெரியதாயிருக்கலாம். சிலர் வாழ்க்கையில் மலிவாயிருக்கலாம். பிணக்கில்லாத வாழ்க்கை அமைந்தவன் தான் ஞானி, ஒருவர் பெற்ற ஞானத்தைப் பரிசோதிக்கக் கருவி ஒன்றிருக்குமானால் அது அவரது குடும்பத்தின் அமைதிதான்.
உங்கள், குடும்பத்தில் பிணக்கு இருந்தால், ‘அந்தப் பிணக்கிற்குக் காரணம் மனைவிதான், அல்லது மக்கள்தாம்’ என்று கூறி தப்பித்துக் கொள்ளக் கூடாது. அத்தகையவர்களுக்குள்ளும் பிணக்கில்லாத குடும்பத்தை நீங்கள் தான் நிறுவ வேண்டும். அமைதியான, திருப்தியான வாழ்க்கையை நீங்களும் வகுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கும் வகுத்துத் தர வேண்டும். இதுதான் உங்கள் ஞானத்தின் தலையாய பயன். இவ்வகையில் வெற்றி பெற்றால் தான் உண்மையான ஞானியராவீர்கள்.
சமுதாயம் அமைதியாக இருக்க வேண்டுமானால், எல்லோருக்கும் எல்லாம் என்ற அளவில் சமுதாய வளம் அமைய வேண்டும். சமுதாய வளத்திற்கு அதன் ஒவ்வொரு அங்கத்தினரும் தத்தம் கடமையை உணர்ந்தாற்றுதல் முக்கியமானது. கடமையோ குடும்பத்தில் தான் என்று ஆரம்பித்து சுற்றம், ஊர், உலகம் என விரிகிறது.
குடும்ப அமைதிக்குக் குடும்பத்தின் செல்வவளம் முக்கியம். குடும்ப வளம் பெருக வேண்டுமானால். அதன் உறுப்பினர் அனைவரும் தத்தம் கடமையை உணர்ந்து ஆற்ற வேண்டும். குடும்பத்தினர் அனைவருக்கும் உடல்நலம் இருக்க வேண்டும். மனவளம் இருக்க வேண்டும். குடும்பத்தில் போதுமான செல்வவளம் இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் தேடும் அமைதி கிட்டும். குடும்பத்தின் அளவும், குடும்பத்தின் பொருளாதார வசதியும் சமமாக இருக்கும் படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கற்க வேண்டிய எல்லா பாடங்களையும் குடும்பத்துக்குள்ளேயே கற்றுக் கொள்ளலாம். குடும்பத்தை நீங்கள் நிர்வாகம் செய்கிறீர்கள் என்றால் அங்கே உங்கள் அறிவுதான் நிர்வாகியாக இருக்க வேண்டும். எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் உணர்ச்சிகள் நிர்வாகியாகக் கூடாது.
மனைவிக்குத் தெரியாமல் கணவனோ, கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேர்த்து வைப்பதும் பின்னால் பெரும் பிணக்குக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவை வைத்துக் கொண்டு ஆன்மீகத்தில் முன்னுக்குப் போக முடியாது. வரவுக்குள் செலவை நிலைநிறுத்துதல் குடும்ப அமைதியைக் காத்துவரும் செயலாகும். பெரும்பாலோர் குடும்பத்தில் வரவு செலவாலேயே பிணக்குகள் தோன்றுகின்றன. அதை ஈடுகட்ட குடும்ப உறுப்பினர் அனைவரும் அல்லது பெரும்பாலோர் – பொருள் ஈட்டும் திறன் பெற்றிருத்தல் மிக்க நலம். குடும்ப அமைதியில் தாய்மார்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. குடும்ப வருமானத்திற்கேற்ப செலவினத்தைத் திட்டமிட்டுச் செயலில் கட்டுப்பாட்டோடு குடித்தனம் நடத்துவது அவர்கள் கையில்தான் உள்ளது.
குடும்ப உறுப்பினர் அனைவருக்குள்ளும் உறுதியான நெருக்கமான உண்மையான இனிய நட்பு நிலவ வேண்டும். கணவன் மனைவிக்கிடையே நட்புறவையும் ஒற்றுமையையும் உயிர்போல் ஓம்பவேண்டும். அதைப்பெற எதை வேண்டுமானாலும் - கற்பு ஒன்றைத் தவிர – வேறு எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம். பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமலும், பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.
பிறவிக்கடல் நீந்துதல் என்ற பெரிய காரணத்திற்காக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்குக் குடும்ப அமைதி இன்றியமையாதது. எனவே கணவன் மனைவி உறவை உயிராக மதியுங்கள். பெற்றோர் மக்கள் கூட்டுறவை மேம்படுத்துங்கள். நமது மனவளக்கலையாலும் அதில் பெற்ற மனோசக்தியும் அறிவாற்றலும் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆகவே குடும்பத்தில் அமைதியினை விரும்பி, தேடி, முயன்று, பெற்று, அனுபோகித்து, பயன்பெற்று, உயர்வடைந்து அந்த அமைதியையும் இனிமையையும் சமுதாய அளவில் பரவவிடுங்கள்.