தாய் சேய் நலம் பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று பார்போம்!

பெண் என்றாலே பொதுவாக ஒரு இரண்டாம்தர பிரஜையாகத்தான் உலகம் நீண்ட காலமாகக் கருதிக் கொண்டு வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது. உலகில் வாழுகின்ற மக்கள் எல்லோரும் பெண்ணினத்தின் அர்ப்பணிப்பு தான். அந்த முறையிலே பெருமை பெற்றவர்கள் பெண்கள். அந்தப் பெருமையைப் போற்றிக் காக்க வேண்டியது ஆண்களுடைய கடமை.

தாய், சேய் நலம் என்று சொல்லும்போது அது பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ மாத்திரம் அல்ல. மனிதகுலத்திற்கே பொதுவான ஒரு மதிப்புடைய இடம். அந்த மனித குல மேன்மைக்காகவே, தாய் சேய் நலம் என்ற பிரிவை எல்லோரும் மதித்து போற்ற வேண்டியது அவசியம். நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், கருவுற்ற நான் முதற்கொண்டு பிரசவம் ஆகிற வரையில் அதைக் கவனிக்க வேண்டியது பெண்களுடைய கடமை. ஆனால் பெண்கள் மாத்திரம் அதைக் கவனித்துக் கொள்ள முடியாது. குடும்பத்திலே முக்கியமாக உள்ள கணவன் இன்னும் பெரியவர்கள், எல்லோருடைய கடமையும் உள்ளது.

கருவுற்ற காலத்தில் ஒரு பெண்ணுடைய மனம் சோர்வு அடையுமேயானால், பிணக்கு அடையுமேயானால், ஒவ்வொரு வருத்தமும் அவர்களின் குழந்தைகளை மனத்தாலே பாதிக்கும். அது மட்டுமல்ல கருஉருவாகும் காலத்திலேயே தவறு ஏற்படாது இருக்க வேண்டும். இந்திய சமுதாயத்திலே இந்து சமயத்திலே நல்லதோர் பழக்கங்கள் எல்லாம் பண்பாட்டில் அமைந்துள்ளது. கருஉருகாலம் அமாவாசையாகவோ, பௌர்ணமியாகவோ அமையக் கூடாது என்று நம் முன்னோர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். ஏனென்றால் சூரியன், பூமி, சந்திரன் இந்த மூன்றும் நேர்கோட்டில் வரும் போது உடல், உள்ளம் இரண்டையும் ஒரு முக்கியமான எல்லைக்கு உயர்த்தவோ தாழ்த்தவோ உடையதாக உள்ளது. அந்தக் காலத்தில் ஏற்டக்கூடிய கரு, உடலிலும், மனதிலும் குறைவு உடையதாகவேதான் அமையும். மேலும் ஆயுர்வேத, சித்தா முறைகளிலே இந்தக் கரு அமையும் காலத்திலும், அந்தக் கரு அமைந்த பிறகும் எந்தெந்த முறையில் பெண் இருக்க வேண்டும் என்றெல்லாம் நமக்கு முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதெல்லாம் நீண்டகால ஆராய்ச்சியிலே செய்த முடிவு. கரு உருவாகும் காலத்திலிருந்து அது முழுமை பெறும் வரை எந்தெந்த உறுப்புகள் எந்த மாதத்தில் வளர்ச்சி பெறுகின்றன என்பதையெல்லாம் கணித்து இருக்கிறார்கள். குழந்தைப் பேறு உண்டாகும் முன்னதாகவே கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை நமது பண்பாட்டில் கொண்டுவர வேண்டும். ஒருவருக்கொருவர் பிணக்கு எழாது உள்ள குடும்பத்தில் நல்ல குழந்தைகள் பிறக்கும்.

கருவுற்ற பெண்களுக்கு சுவாசப்பைகள் (LUNGS) நன்றாக விரிவதற்கு மனவளக்கலையில் ஒரு பயிற்சி உள்ளது. முன்காலத்தில் பிராணாயாமம் என்று ஒரு மூச்சுப்பிடித்தல் பயிற்சி இருந்தது. அதில் சில உபாதைகளும் இருந்தது. அந்தப் பயிற்சியை எளிமையாக்கி மனவளக்கலையில் மகரிஷி அளித்துள்ளார். இப்பயிற்சி முறையை ஐந்து நிமிடங்களில் கற்றுக் கொள்ளலாம். மேலும் கர்ப்ப காலத்தில், இரண்டு மாதத்தில் இருந்து கடைசி வரையில் அஸ்வினி முத்திரை சில நிலைகளில் இருந்து செய்து கொண்டே வந்தால், குழந்தை நல்ல முறையில் வளரும். பிரசவம் எளிய முறையில் ஆகும். பிரசவம் ஆனபிறகும் தாயும், சேயும் உடல்நலத்தோடு இருக்க இப்பயிற்சி உதவுகிறது.

எனவே இந்த முறையில் உடலை குழந்தை வளரும் போதே பாதுகாத்துக் கொண்டால் உடலும் நன்றாக இருக்கும். மனமும் நன்றாக இருக்கும். தாய்சேய் நலத்தைப் போற்ற வேண்டியது மனிதகுலத்தின் கடமை. எல்லோரும் அதற்கு மதிப்பளித்து ஒவ்வொருவரும் அதற்குரிய கடமையைச் செய்ய வேண்டியது அவசியம்.

வாழ்க வையகம்!                                                         வாழ்க வளமுடன்!