அறிவு வறுமை

ஒழுக்கம், கற்பு என்பவை சமுதாய நியதிகள், வாகனங்களின் ஒரு வழிப் பயணம் போல. தத்தம் உடல் மன நலம் காக்கவும், சமுதாயத்தோடு முட்டி மோதிக் கொள்ளாமல் இருக்கவுமே ஒழுக்கம் தேவையாகிறது. அப்படிப்பட்ட ஒழுக்கம் ஆண், பெண், குழந்தைகள், முதியவர் அனைவருக்கும் தேவையாகிறது. சிறை காக்கும் காப்பு என்ன செய்து விட முடியும் அவரவர்தான் மனதால் உணர்ந்து நிறையைக் காத்துக் கொள்ள வேண்டும். ஆண்களும்தான். அப்படியானால் ஒழுக்கத்தின் எளிய சூத்திரம் “தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ உடலுக்கோ, உணர்ச்சிக்கோ ஊறு செய்யாத செயல்களைச் செய்வதுதான் ஒழுக்கம்” அனைவரிடத்தும் முட்டிக் கொள்ளாமல் சுமூகமான உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் விமர்சனம் (Comment), அதிகாரம் (Command), கட்டாயப்படுத்துதல் (Demand) மூன்றையும் ஒழித்து விட வேண்டும்.

சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம், இருந்தால்தான் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி கிட்டும். உலகின் பொருள் வறுமையை நீக்க நீண்ட நாட்களாகப் பலரும் பலவிதமாக முயன்று வருகிறார்கள். அவர்கள் முயற்சி வீண் முயற்சியாகவே தெரிகிறது. அறிவு வறுமை நீங்காத வரையில் பொருள் வறுமையை நீக்கவே முடியாது. தேவைக்கு மேல் சேர்த்து வைப்பதும் அறிவு வறுமைதான். தனக்கு என்ன வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று உணராமல் தன்மானமின்றி ஒவ்வொன்றிற்கும் மற்றவரை எதிர்பார்ப்பதும் அறிவு வறுமைதான். இந்த அறிவை ஒவ்வொருவரும் பெறாத வரையில் செய்யப்படும் சீர்திருத்தங்கள், சட்ட திட்டங்கள், போதனைகள், சேவைகள் எல்லாமே பயனற்றதாகத்தான் முடியும். எனவே முயன்று அந்த அறிவைப் பெற வேண்டியது ஒவ்வொருவரின் முக்கியமான கடமையாகிறது.