There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
உயிரின் ஆற்றல் தான் அறிவு என்றும் மனம் என்றும் கூறப்படுகிறது. உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என பத்து வகை செயல் ஆற்றப்படிகள் மனதிற்கு உண்டு. ஒரு மனிதன் வாழ்நாளில் எந்தப் பொருள், எந்த நிகழ்ச்சி, எந்த சூழ்நிலை இவற்றில் முன் சொன்ன பத்து விதமாக எத்தனை தடைவ, எவ்வளவு காலம் மனம் ஈடுபட்டதோ, அதனதன் விகிதாச்சார அளவுதான் - இணைந்த கூட்டுத் தொகுப்புத் தன்மைதான் - மனிதன் தன்மையாகும்.
நாம் புலன்களைக் கொண்டு பேரலை இயக்கத்தில் நமது உயிர்ச்சக்தியை அறிவாற்றலாகப் பயன்படுத்திப் பழகியிருக்கிறோம். திடீரென ஒரு நாளையில் அல்லது சில நாட்களுக்குள், நுண்ணலை இயக்கத்திற்கு மாற்றி, நிலைபெறச் செய்ய முடியாது. நெற்றியில் ஆற்றலைக்கூட்டி, துரியத்தில் சிறிது சிறிதாக நுண்ணலை இயக்கத்துக்கு உயிரின் விரைவைக் கட்டுப்படுத்திக் கொண்டு வந்து விட வேண்டும்.
மேலும் மனோமயகோசத்திலேயே செயல்படுத்தி வந்த அறிவை, விஞ்ஞானம மய கோசத்தில் நிலைபெறச் செய்ய தத்துவ விளக்கம் உதவி செய்யும். அணு முதலாக நட்சத்திரங்கள் வரை, சிறிதாகவும், பெரிதாகவும் இயங்கும் இயக்கங்களில் இயற்கை விதியை கூர்ந்துணர்ந்து வரும் ஆராய்ச்சியால், விஞ்ஞான மய கோசத்தில் அறிவு பயன்படும். பிறகு ஆனந்தமய கோசமான துரியாதீத நிலையில் மனம் ஒடுங்கி உறவு கொள்ளும். தவமும் ஆராய்ச்சியும் கூடக்கூட, தெய்வநிலை தெளிவாக சித்தியாகும். இது சாதனை வழி. நாம் பாடுபட்டுத் தான் வெற்றிபெற வேண்டும். எனினும் நமது பாதை எளிது. அதிக சிரமமும் காலமும் தேவையில்லை.
நமது அறிவின் இயக்க நிலைகளை நான்காகப் பிரித்துப் பார்க்கலாம். அவை: 1. புறமனம்: இதனைப் புத்தி, தற்போதைய அறிவு (Conscious Mind), என்றும் கூறலாம். இது புலன்களை இடமாகப் பெற்று இயங்குகிறது. 2. நடுமனம்: இதனைச் சித்தம் (Sub-Conscious Mind) என்றும் கூறலாம். இது மூளையை இடமாகப் பெற்று இயங்குகிறது. 3. அடிமனம்: இதனைப் பேரறிவு (Super-Conscious Mind) என்றும் கூறலாம். இது வித்து செல்களை இடமாகப் பெற்று இயங்குகிறது. 4. தெய்வநிலை: இதனை ஒழிவிலொடுக்கம், மெய்ப்பொருள் நிலை (Unconscious Mind) என்றும் கூறுவர், இது பரநிலையாகவே பிரபஞ்சம் முழுவதும் இடமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு இயக்கத்துக்கும் அலை வேறுபாடு உண்டு. தவமும், சிந்தனையும் கூடக்கூட, நுண்ணலை இயக்கத்திற்கு நாமே வருகிறோம். அங்குதான் மனம் நிலைபேறு கொள்ளும். மேலும் வாழ்க்கை அனுபவங்களால் நமக்குப் பல பொருட்கள், செயல்கள், உயிர்கள் உறவு உண்டு. அவ்வுறவுகளில் உள்ள உண்மை நிலைத் தெளிவை ஆராய்ச்சியால் பெற்று விடுவோம். அப்போது சலனம் குறைந்து விடும். அமைதி இயல்பாகும். அந்த அமைதியே தானாக துரியாதீத நிலைபேறாக விளங்கி நிலைபெறும்.
குறையே வேண்டாம். அடைய வேண்டிய நிலைக்கு காலமும், முயற்சியும் பயனை விளைவித்துக் கொடுக்கும். மகிழ்ச்சியோடு உலகக் கடமைகளை முன்னை விடச் சிறப்பாக ஆற்றி வாருங்கள். அறுகுண ஆளுமைப்பேறு, மெய்ப்பொருள் விளக்கத்தை விரைவுபடுத்தும். ஞானத்திற்காக வாழ்வைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற தவறான கருத்தை மாற்றி விடுங்கள். ஞானத்தால் வாழ்வை இன்பமயமாக்கிக் கொள்ளலாம் என்ற தெளிவில் கடமையாற்றுங்கள். இத்துறையில் ஒருவர்பெறும் வெற்றி, உலக மக்கள் வெற்றியாக மலரும். மனிதகுல வெற்றியாகத் திகழும்.
PHONE: +91 7904402887 / 04253-292746