There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
சுவாமிகளின் மற்றுமொரு முக்கியமான உபதேசம் வாழ்த்து. இடைவிடாமல் வையகம் அனைத்தையும் வாழ்த்திக் கொண்டே இருக்கச் சொல்கிறார். திட்டித் திட்டிப் பழித்துப் பழித்தே பழக்கப்பட்ட நமக்கு வாழ்த்துதல் புதிதுதான். ஆனால் என்ன அமைதி, ஆனந்தம். மனம் அமைதிக்கு வராமல் வாழ்த்த முடியாது. பழக்கத்தினால் இந்த அமைதி வந்து விடுகிறது. யாரை வாழ்த்துகிறோமோ அவர்களுக்கும் மனம் குளிர்கிறது. அமைதி ஏற்படுகிறது. இருவருக்கும் இடையே இணக்கமான நட்புறவு ஏற்படுத்தப்படுகிறது.
முதலில் தன்னைத் தானே வாழ்த்திக் கொள்ளச் சொல்கிறார். ஒருவருக்குள்ளேயே முரண்பாடுகள் நிறைந்திருக்கிறது. தன்னைத் தானே வாழ்த்திக் கொள்வதால் எதிர்மறையான எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து நேர்மறையான எண்ணங்கள் சுய தீர்மானமாக வலுவேற்றப்படுகின்றன. அடுத்து வாழ்க்கைத் துணையை வாழ்த்தச் சொல்கிறார். இந்த உலகிலேயே யார் அதிக நெருக்கமாக இருக்கிறார்கள் என்றால் கணவன் மனைவிதான். அதே நேரம் யார் அதிக கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்கள் என்றால் அதுவும் கணவன் மனைவிதான்.
இந்தக் கருத்து வேறுபாடு வாய்ச் சண்டையாகவும் அடிதடியாகவும், சாபங்களாகவும், எதிர்பாராத விபத்துக்களாகவும் மாறுகின்றன. எனவே வாழ்க்கைத் துணைவர்கள் ஒருவருக் கொருவர் வாழ்த்திக் கொள்வது அவசியம் என்கிறார் குருநாதர். ஒருவர் சுவாமிகளிடம் தன் மனைவியால் தனக்குத் தாங்கொணா துன்பம் என்று முறையிட்டாராம். சுவாமிகள் இந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தாராம். ஒரு மாதத்திற்கு பின் அவர் மறுபடியும் வந்து 'சுவாமி என்ன அதிசயம் என் மனைவி மாறிவிட்டாள்' என்று மகிழ்ச்சியோடு கூறினாராம்.
'சரி எப்படி வாழ்த்தினீர்கள்' என்று சுவாமி கேட்டாராம். 'நீங்கள் ஒரு இடத்தில்தான் வாழ்த்தச் சொன்னீர்கள். நான் உங்களை விட மேலே போய் மூன்று இடங்களில் வாழ்த்தினேன். வாழ்க்கைத் துணை என்ற இடத்தில் வாழ்த்தினேன். மேலாளர் என்ற இடத்தில் வாழ்த்தினேன். இன்னல் புரிவோர் எதிரிகளாக நினைப்போர் என்ற இடத்திலும் மனைவியையே நினைத்து வாழ்த்தினேன்' என்றாராம். இருவருக்கிடையே இணக்கம் ஏற்பட வாழ்த்து பெரிதும் உதவுகிறது.