மனிதனிடம் விலங்கினப் பதிவு பற்றி வேதாத்திரி மகரிஷி கூற்று

மனிதர்களாகிய நாம் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமான குணங்களுடன் இருப்பதை உணர்கிறோம். அவ்வாறு நம்மிடம் உள்ள குணங்கள் விலங்குகளின் குணத்தோடு சம்பந்தமுடையவை என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். குழந்தைகள் விளையாடும் பொழுது பாருங்கள்! சண்டையிட்டு கடித்து வைத்துக் கொள்ளும். இந்தப் பண்பு விலங்கினத்திலிருந்து வந்ததுதான். பெரியோர்களே கூட ஒருசில நேரத்தில் சண்டையிட்டுக் கத்திக் கொள்வர். இதுவும் விலங்கினப் பண்பு தான்.

இரண்டு விதமான விலங்கினங்கள் சந்தர்ப்ப வசமாக ஒன்றுகூடி அதிலே இருந்து முதல் மனிதன் தோன்றி அதன் மூலமாக வளர்ந்ததுதான் உலக சமுதாயம் என்பது விஞ்ஞான முறையிலே உள்ளது. அது மாத்திரமில்லாமல் தசாவதாரம் என்ற முறையிலே உள்ள ஒரு விளக்கம் கூட, அந்தப் பரிணாமத்தைத்தான் கொண்டு வருகிறார்கள். அப்படிப் பார்க்கும் பொழுது இரண்டு அறிவுடைய புழு முதற்கொண்டு, ஐந்தறிவுடைய எந்த விலங்கினமானாலும் எப்படி வாழ்கிறது என்று பார்க்கிற பொழுது, பிற உயிரைக் கொன்று, அதனுடைய சதையை உணவாகக் கொண்டு வாழ்கின்றன.

இதற்காகவே அதனுடைய மூளையினுடைய செயல்பாடும், உடல் உறுப்பினுடைய செயல்பாடும், மனதினுடைய செயல்பாடும் அமைந்து, எல்லா ஜீவ இனங்களிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அப்படிப் பார்த்தால் மனித வர்க்கம் எத்தனை விதமான ஜீவராசிகளைக் கடந்து இன்று மனிதனாகத் தோன்றி, முதல் மனிதன் தோன்றிய அன்றிலிருந்து இன்று வரையிலே விரிந்த நிலையிலே இப்படிச் சமுதாயமாக விரிந்து இருக்கிறதே, அத்தனை மனிதரிடமும் அவ்வளவு ஜீவ ராசிகளின் குணாதிசயங்களும், கருவமைப்பும் பதிவாக அமைந்து, தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இந்தப் பதிவுகளைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்யவில்லையானால் மனித இனம் என்றுமே தூய்மை பெற முடியாது. மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் அவசியம் என்று எல்லோரும் தெரிந்து கொண்டிருக்கிறோம். அதற்கு ஒரே ஒரு வழி, அகத்தவத்தின் மூலமாகவும், பஞ்சேந்திரிய உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டும், மீண்டும் தவறு செய்யாத அளவிலே அந்தக் கட்டுப்பாடு இயல்பாக வரவேண்டும்.

அதற்கும் மேலாக கருவமைப்பின் வழியே வந்த பதிவுகளையெல்லாம் மாற்றி, நல்ல பதிவுகளை மாத்திரம் கொண்டு வாழ்க்கையை தூய்மை செய்து கொள்வதற்கு மூளையிலே உள்ள செல்களையெல்லாம் ஒழுங்கு செய்து கொள்ள வேண்டும். இதற்கு பெரியவர்கள் யோகசாதனை என்ற ஒரு முறையை, குண்டலினி யோகம் என்ற முறையை காண்பித்திருக்கிறார்கள். ஆக்கினையிலே உயிர்ச்சக்தியை வைத்து, தவம் செய்து, ஐந்தடக்கி, அதாவது ஒரே ஒரு புலனாக, உணர்வாக, நின்று நிலைக்க, நிலைக்க ஐம்புலன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

அதன்பிறகு மேல்நிலையிலே தியானம் செய்துகொண்டு வரும் பொழுது, இதுவரையிலே எத்தனை விதமான கேடான செயல்களைச் செய்து அந்த மூளையினுடைய செல்கள் சிதைக்கப்பட்டிருக்கிறதோ அந்தச் சிதைவுகளையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டுமானால், உச்சியிலே மூளையிலே மனம் வைத்துத் தியானம் செய்ய வேண்டும். அதைத்தான் துரியம் என்று சொல்வார்கள். அவ்வாறு செய்யும் பொழுது கருவமைப்புப் பதிவாக வந்த எல்லாவிதமான கேடுகளையும் மாற்றியமைத்து மனிதன் தூய்மையடைகிறான்.

அதற்குப் பிறகு எல்லாம் வல்ல இறைநிலையோடு கலப்பதற்கு வான் உணர்வு, தெய்வ உணர்வு என்ற முறையிலே பயிற்சி முறையாக உள்ளது. இந்த பயிற்சியின் மூலமாக மனதையும் ஒழுங்குபடுத்திச் (Streamlining the mind) செயலையும் ஒழுங்குபடுத்தி (Disciplining the deeds) நமது பழக்க வழங்கங்களை மாற்றி, தீய குணங்கள் எழாது செய்தாலொழிய விலங்கினத்தினுடைய பதிவுகள் மாறாது.

வேதாத்திரி மகரிஷி அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கும் எளியமுறை குண்டலினியோகம் மற்றும் உடற்பயிற்சியினை கற்று விலங்கினத்திலிருந்து வந்த பதிவுகளைப் போக்கி வாழ்வின் நோக்கமான முழுமைப்பேறு அடைய வரவேற்கிறோம்!

வாழ்க வையகம்!                                                         வாழ்க வளமுடன்!