There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
யோக சாதனைகளிலேயே சிறந்ததோர் பயனளிக்கும் பயிற்சி முறை மௌன நோன்பு ஆகும். வாய்ப்பேச்சு இல்லாதிருத்தல் ‘பேசாநோன்பு’ என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மௌன நோன்பு என்பதற்கு மேலும் சிறப்பான ஆழமான கருத்தும் உண்டு. அது ‘மனமடக்கப் பயிற்சி’ அல்லது மனத்தைச் சீரமைத்துக் கொள்ளும் பயிற்சி என்பதாகும்.
மனத்தைச் சீரமைக்கும் சாதனைக்கு வாய்பேசாதிருத்தல் ஒரு புறச்சடங்கு ஆகும். மனித மனமானது முன்வினைகளின் பதிவுகளால் அது பெற்ற தன்மையைக் கொண்டு அவ்வப்போது புலன்கள் மூலம் புறப் பொருட்களோடு தொடர்பு கொள்ளும் போது இன்பத்தின் வேட்பாலோ, துன்பத்தின் அச்சத்தாலோ செயல்களை, அனுபோகங்களை உருவாக்கிக் கொண்டும், அனுபவித்துக் கொண்டும் இயங்குகிறது. மனிதனிடம் இன்ப வேட்பே இயல்பாக உள்ளது.
புலன் கவர்ச்சியினால் பொருட்களோடு உயிர்களோடு தொடர்பு கொள்வதில் அளவு மீறும்போது முறை மாறும் போதும் துன்பமே அதிகமாக விளைகின்றது. இயற்கையின் ஒழுங்கமைப்பால் மனிதனிடம் அமைந்த ஆறாவது அறிவு சிறப்புற்று விளங்க மேலும் மேலும் உயர்ந்து, இயற்கையின் முழுமையை உணர்ந்து பிறவிப் பயனை எய்த மனிதனுக்கு மன அமைதி தேவை. துன்ப உணர்வுகள் அமைதியை குலைக்கின்றன. அறிவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. எனவே துன்பமற்ற முறையிலே மனிதன் வாழ வழிகாண வேண்டும்.
துன்பங்களை அகற்றி மனித அறிவு தடையின்றி உயர வேண்டுமென்று கருணையோடு சிந்தித்து முற்காலத்தியப் பேரறிஞர்கள் ஓர் உண்மையை உணர்ந்தார்கள். மனிதனிடம் தன்முனைப்பு, பழிச்செயல் பதிவுகள், மயக்கம் எனும் மூன்று களங்கங்கள் உள்ளன என்று கண்டறிந்தார்கள். இயற்கை எனும் முழுமையிலே எந்த உயிரும் ஒரு பகுதியேயாகும். அறிவு விரிவடையா நிலையிலே உணர்ச்சிகளால் எல்லை கட்டப்பட்டு, உடலளவிலேயே நான் என்று எல்லை கட்டிக் கொண்டான் மனிதன். ஒருவனுக்கு அமையும் பருவம், உடல் வலிவு, செயல்திறம், கல்வி, செல்வாக்கு, செல்வவளம், சூழ்நிலை, அமைப்பு இவற்றைக் கொண்டு மற்றவரோடு தன்னை ஒப்பிட்டு நோக்கித் தான் உயர்வாகவோ, தாழ்வாகவோ இருப்பதாக நினைத்துக் கொள்கிறான். தன்னை இயற்கையில் இருந்தோ சமுதாயத்தில் இருந்தோ வேறுபடுத்திக் கொண்டு தனித்தன்மையைக் கருத்தை வளர்த்துக் கொள்கிறான். இது தன் முனைப்பாகும். இதுவே ஆணவம் என்று வழங்கப்படுகிறது.
அதிகாரப் பற்றினை ‘தான்’ என்றும், குறிப்பிடுகின்றோம். இவ்விருவிதப் பற்றுகளான இச்சைகளும் அவ்வப்போது பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வ தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனம் ஆறு குணங்களாக உருவெடுத்து சந்தர்ப்பங்களை ஒட்டிச் செயல்களாக விளைகின்றன.
இந்த ஆறுகுணங்கள் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம் என்றும் வழங்கப்படும். விரைவான மன அலைகளைக் கொண்ட இந்த ஆறு குணங்கள் வழியே உணர்ச்சி வசப்பட்டு மனிதன் செயல்புரியும் போது தனக்கும் பிறர்க்கும் துன்பங்களே விளைகின்றன. துன்பம் விளையும் செயல்களைப் பாவம் என்றும் பழிச்செயல்கள் என்றும் கூறுகிறோம். அறிவின் குறுகிய நிலையால் தன்முனைப்பும், தன்முனைப்பால் பழிச்செயல்களும் பெருகும்போது மனிதன் அறிவு சீர் குலைகின்றது. விளக்கமின்றி மயக்கநிலை பெறுகின்றது. இதுவே மாயை அல்லது மயக்கம் ஆகும். இம்மூன்று களங்கங்களைப் போக்கி மனித மனத்தைத் தூய்மை செய்வதற்கு அறிவிலே சிறந்த முன்னோர்கள் கண்டுபிடித்த எண்ணம், சொல், செயல் என்ற மூன்றையும் சீர்திருத்திக் கொள்ளும் பயிற்சி முறை அகத்தவமும் அறநெறியுமாகும்.
PHONE: +91 7904402887 / 04253-292746